அவசர தேவைக்கு பணம் வராததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த நபர் கைது


அவசர தேவைக்கு பணம் வராததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த நபர் கைது
x

பணம் வராததால் ஆத்திரமடைந்த நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அடுத்த பொந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. விவசாயியான இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இதில் எந்திரம் சேதமடைந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஏ.டி.எம். காவலாளி, சத்ய நாராயணாவிடமிருந்த நாற்காலியை பிடுங்கிக் கொண்டு, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்திய நாராயணனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்து வைத்து இருக்கிறேன். ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க பலமுறை முயன்றும் பணம் வரவில்லை. என்னுடைய தேவைக்காக தான் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய அவசர செலவுக்கு பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பாத வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து போலீசார் சத்திய நாராயணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story