ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தில் பங்கேற்க மும்பை வந்த ஜான் சீனா


ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தில் பங்கேற்க மும்பை வந்த ஜான் சீனா
x

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று மும்பையில் ஆடம்பரமாக நடைபெற உள்ளது.

மும்பை,

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானியின் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடந்தன.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபர் விரேனின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் உலகமே வியக்கும் வகையில் திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் அம்பானி குடும்பத்தின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடந்தது. இதில் உலக பிரபலங்கள் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் கடந்த 1½ ஆண்டாக அவ்வப்போது நடந்து வந்த நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலை முதலே மும்பையில் அரசியல் தலைவர்கள், பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் உலகின் பெரும் பணக்காரர்கள், வெளிநாட்டு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக மும்பை வந்தடைந்தார். இவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சமீபத்தில் டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story