மூக்கால் டைப்பிங் செய்து சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்த இந்தியர்
சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளை படைத்து, தன்னுடைய பெயருக்கு பெருமை சேர்த்ததுபோல், சாதனை படைக்க வேண்டியதே தன்னுடைய கனவு என்று வினோத் கூறுகிறார்.
புதுடெல்லி,
இந்தியாவை சேர்ந்த வினோத் குமார் சவுத்ரி (வயது 44) என்பவர் ஆங்கில எழுத்துகளை கணினியில் டைப்பிங் செய்வதில் கின்னஸ் உலக சாதனை படைத்து, 2 முறை அதனை அவரே முறியடித்து இருக்கிறார்.
இதன்படி, முதன்முறையாக 2023-ம் ஆண்டில் 27.80 வினாடிகளில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அதே ஆண்டில், 2-வது முறையாக முயற்சித்து, 26.73 வினாடிகளில் டைப்பிங் செய்து, சொந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.
இந்நிலையில், 3-வது முறையாக இவற்றை விட குறைந்த நேரம் எடுத்து கொண்டு, 25.66 வினாடிகளில் டைப்பிங் செய்து, மீண்டும் தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.
இதுபற்றி கின்னஸ் உலக சாதனை அமைப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. உங்களுடைய மூக்கால் நீங்கள் ஆங்கில எழுத்துகளை எவ்வளவு விரைவாக டைப்பிங் (இடைவெளி விட்டு) செய்ய முடியும்? என தலைப்பிட்டு உள்ளது. அந்த வீடியோவில், மூக்கை பயன்படுத்தி ஆங்கில எழுத்துகளை இடைவெளி விட்டு, அவர் டைப்பிங் செய்கிறார்.
இந்த சாதனை படைத்தது பற்றி அவர் கூறும்போது, இதற்காக மணிக்கணக்கில் பயிற்சி செய்து இருக்கிறேன். ஆனால், மூக்கை கொண்டு டைப்பிங் செய்ய பயிற்சி மேற்கொள்ளும்போது, சில சமயங்களில் மயக்கம் வந்து விடும். எனினும், போதிய பயிற்சி பெற்றால் எல்லா விசயமும் சாத்தியப்படும் என உறுதிப்பட கூறுகிறார்.
தினமும் தியானம் செய்வதுடன், நேர்மறையாக சிந்திப்பதே தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என்றும் அவர் கூறுகிறார். இந்தியாவின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளை படைத்து தன்னுடைய பெயருக்கு பெருமை சேர்த்ததுபோல், சாதனை படைக்க வேண்டியதே தன்னுடைய கனவு என்றும் அவர் கூறுகிறார். இதுதவிர, ஒரு கையால், பின்னோக்கி விரைவாக (5.36 வினாடிகள்) டைப்பிங் செய்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.