பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள்.. கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்திக்கு அமித்ஷா பதிலடி
ஆபாச வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்து பிரஜ்வால் ரேவண்ணா இந்தியாவை விட்டு தப்பி சென்றுவிட்டார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
ஹாசன் தொகுதியில் கடந்த 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வேகமாக பரவின. 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் அந்த வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவை விட்டு தப்பி சென்றுவிட்டார்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்துவிட்டு பிரஜ்வால் ரேவண்ணா எப்படி நாட்டை விட்டு வெளியேற முடிந்தது? என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, இந்த விஷயத்தில் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
"கர்நாடக முதல்-மந்திரியிடமும், துணை முதல்-மந்திரியிடமும் பிரியங்கா காந்தி கேட்க வேண்டும். இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்பதால் நாங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.