பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை: அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- சித்தராமையா வலியுறுத்தல்
அமித்ஷா ராஜினாமா செய்து ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, அவர் குடும்பத்தை சிறந்த 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், கருணை அடிப்படையில் குஜராத் மாநில அரசு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குற்றவாளிகள் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் ஒப்புதலுடன் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்தது.
குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது நடத்தப்படும் விசாரணையை வருகிற நவம்பர் 29-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று ஒத்தி வைத்து உள்ளது.
இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், "பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு பாஜக தலைவர்களின் கொடூரமான மனநிலையை அம்பலப்படுத்துகிறது. இந்த மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர். அமித்ஷா ராஜினாமா செய்து ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்"
இந்த விஷயத்தை பாஜக தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்த விரும்புவது துரதிர்ஷ்டவசமானது. பாஜகவுக்கு, இந்த நாட்டின் பெண்களின் கவலையை விட தேர்தல்கள் முக்கியமானவை" என தெரிவித்துள்ளார்.