சிறந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் - அமித்ஷா


சிறந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் -  அமித்ஷா
x

சிறந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசி உள்ளார்.

சிறந்த இந்தியாவை உருவாக்க...

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். நேற்று தார்வாரில் உள்ள பி.வி.பூமரட்டி கல்லூரியின் பவள விழாவில் அவர் கலந்துகொண்டார். அந்த கல்லூரியில் உள் அரங்கை திறந்து வைத்து அமித்ஷா பேசியதாவது:-

நாடு சுதந்திரம் பெறுவதற்காக பாடுபட்ட மகான்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்கள் படிக்க வேண்டும். நம் ராணுவ வீரர்களை போல நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் கிடைக்காது. நாம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யாமல் இருக்கலாம். ஆனால், நம் வாழ்க்கை தேசத்துக்காக இருக்க வேண்டும்.

2047-ம் ஆண்டு சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும்போது ஒவ்வொரு துறையிலும் நம் தேசம் முதலிடத்தில் இருக்க வேண்டும். அத்தகைய சிறந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டில் இளைஞர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்க வேண்டும்.

3-வது பெரிய பொருளாதார நாடு

ஒருவர் தனது தொழிலில் அல்லது விருப்பமான துறையில் உயரங்களை அடைய முயற்சிக்க வேண்டும். ஆனால் அதனுடன் நம் இந்திய உலகில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் 8-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-வது இடத்தில் உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

இந்தியாவை உற்பத்தி மையமாகவும், 5-வது பெரிய பொருளாதார நாடாகவும் மாற்ற பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார். காப்புரிமை பதிவு எந்த நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. கடந்த 2013-14 காலக்கட்டத்தில் 3,000 காப்புரிமை விண்ணப்பங்கள் வந்த நிலையில், 2021-22 காலக்கட்டத்தில் 1.50 லட்சமாக அதிகரித்துள்ளது.

இளைஞர்கள் பாரம்பரிய சிந்தனை மற்றும் கட்டமைப்பில் இருந்து ெவளியே வந்து புதிதாக சிந்திக்கவும், தைரியமாகவும் முன்னேற வேண்டும்.

50 ஆயிரம் தடயஅறிவியல் விஞ்ஞானிகள்

நாட்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், ஐ.ஐ.ஐ.டி. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கல்வியின் வரம்பை அதிகரித்துள்ளது. பின்வரும் நாட்களில் தடய அறிவியல் துறை மிகப்பெரியதாக மாறும். அதற்கு நல்ல பயிற்சி பெற்ற மனித வளங்கள் தேவை.

அறிவியல், மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்க போகிறது. ஏனென்றால் வரும் நாட்களில் குற்றங்களுக்கு தடய அறிவியல் சான்று கட்டாயமாக்க போகிறோம். இது நடந்தால், நாட்டுக்கு இன்னும் 50 ஆயிரம் தடயஅறிவியல் விஞ்ஞானிகள் தேவைப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story