பல்கலைக்கழக மாணவர்கள் மாநில மொழியில் தேர்வு எழுத அனுமதி - பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
ஆங்கில வழி பாடத்திட்டமாக இருந்தாலும், மாணவர்கள் மாநில மொழியில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாடப்புத்தகங்களை தயாரிப்பதில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய் மொழி மற்றும் மாநில மொழிகளில் கற்றல்-கற்பித்தலை மேற்கொள்வதற்கு ஆதரவாக இருக்கின்றன.
இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்துவது அவசியம். தாய்மொழி, மாநில மொழிகளில் பாடப்புத்தகங்களை எழுதுவது, கற்பித்தலில் அம்மொழிகளை பயன்படுத்துவது, வேறு மொழி பாடப்புத்தகங்களை தாய்மொழியில் மொழி பெயர்ப்பது ஆகியவற்றையும் ஊக்குவிக்க வேண்டும்.
எனவே, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களது மாணவர்கள், தேர்வில் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழி பாடத்திட்டமாக இருந்தாலும் கூட மாநில மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும்.
தேர்வில் மாநில மொழிகளில் எழுதியதை மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களில் கற்றல்-கற்பித்தல் நடைமுறையில் மாநில மொழிகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.