பெங்களூரு பீனியா மேம்பாலத்தில் விரைவில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி; சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பெங்களூரு பீனியா மேம்பாலத்தில் விரைவில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
மழைக்கால கூட்டத்தொடர்
பெங்களூரு பீனியா மேம்பாலத்தில் விரைவில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் மந்திரி உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டது
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அந்த கேள்வி நேரத்தில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் மஞ்சுநாத், பீனியா மேம்பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
குரகுன்டேபாளையா அதாவது பீனியா மேம்பாலத்தில் ஒரு இடத்தில் கேபிள் வயர் அறுந்ததால் அந்த பகுதியில் பலவீனம் அடைந்தது. இதையடுத்து அந்த பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்ட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அளித்தனர். அதில் மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களை அனுமதிக்கலாம் என்றும், கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
இதையடுத்து அந்த மேம்பாலத்தில் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தி சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது, இந்த பீனியா மேம்பால பிரச்சினை குறித்து அவரிடம் பேசினேன்.
அந்த மேம்பாலத்தில் கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளதை சரிசெய்ய தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், அந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனால் அந்த மேம்பாலத்தில் பழுதாகியுள்ள கேபிள் வயர் சரிசெய்யப்படும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடித்து அதன் பிறகு அதில் கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு விரைவாக அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.