அனைத்து நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு - கர்நாடக துணை முதல்-மந்திரி
அனைத்து நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சாலை திட்டங்கள்
பெங்களூருவில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அவர் நல்ல ஆலோசனைகளை கூறியுள்ளார். பெங்களூருவில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இதனால் பெங்களூருவுக்கு அதிகளவில் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தீர்வு காணுமாறு நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சுரங்க பாதை, மேம்பாலம் அல்லது வேறு மாதிரியான சாலை திட்டங்களை தயார்படுத்துமாறு கூறியுள்ளார். ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்ட அறிக்கை தயாரிக்க உலக அளவிலான டெண்டர் விட்டுள்ளோம். டெண்டரில் பங்கேற்க வருகிற 8-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வடிவமைப்பையே மாற்ற வேண்டும்
பெங்களூருவில் போக்குவரத்து நொிசலுக்கு தீர்வு கண்டு நகரின் வடிவமைப்பையே மாற்ற வேண்டும். டெல்லி, மும்பையிலும் அதிக வாகன நெரிசல் உள்ளது. ஆனால் பெங்களூரு சர்வதேச நகரமாக கருதப்படுவதால், இங்குள்ள வாகன நெரிசல் குறித்து அதிகம் பேசுகிறார்கள். சீனா, சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகள் முன்வந்து தங்களின் ஆலோசனையை கூறியுள்ளன. டெண்டரில் பங்கேற்று திட்டம் குறித்த விவரங்களை வழங்குமாறு அந்த நாடுகளின் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
நதிநீர் பங்கீடு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். மகதாயி, காவிரி, கிருஷ்ணா நீர் பங்கீடு மற்றும் மேகதாது திட்டத்தின் நிலை குறித்து மத்திய அரசிடம் இருந்து விவரங்களை பெற்றுள்ளேன். மற்ற விஷயங்கள் குறித்து மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். காலவிரயம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. முடிந்தவரை அனைத்து நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.
உண்மை தன்மை
பெங்களூரு வளர்ச்சி ஆணையம் தொடர்பாக 350 வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து வக்கீல்களிடம் தகவல் பெறப்படும். பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளில் அதன் உண்மை தன்மையை அறிந்து ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால் அந்த பணிகள் குறித்து அறிக்கை வழங்கும்படி கேட்டுள்ளேன். இதுகுறித்து விசாரிக்குமாறு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே கூறியுள்ளனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.