பிரதமர் நரேந்திர மோடி தன்னைத் தானே வடிவமைத்து கொள்பவர் - நடிகர் அக்ஷய் குமார்

Image Courtesy : Twitter @akshaykumar
தன்னைத் தானே வடிவமைத்து கொள்ளும் திறன் பிரதமர் மோடியிடம் உள்ளதாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
மும்பை,
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அக்ஷய் குமார். இவர் 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணல் செய்தார். அதுவரை அதுபோன்ற நேர்காணலில் பெரிதளவில் பங்கேற்காமல் இருந்த பிரதமர் மோடி அக்சய் குமார் உடன் நேர்காணலில் பங்கேற்று பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த நேர்காணல் குறித்து நடிகர் அக்ஷய் குமார் மனம் திறந்து பேசியுள்ளார். பிரதமர் குறித்து அவர் கூறுகையில், "ஒரு சாமானியர் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்களை, என் இதயத்திலிருந்து நேராக அவரிடம் கேட்டேன். நம் பிரதமர் ஏன் தலைகீழாக கடிகாரத்தை அணிந்துள்ளார்? போன்ற விஷயங்களை நான் தெரிந்து கொள்ள விரும்பினேன். அவரிடம் அவரது கொள்கைகளை பற்றி கேள்வி கேட்டு இருந்தால் எனக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் ? அது என் வேலையல்ல. அப்படி செய்திருந்தால் அது போலியாக தோன்றியிருக்கும்.' என தெரிவித்தார்.
மோடி குறித்து அக்ஷய் குமார் மேலும் கூறுகையில், "நமது பிரதமரிடம் உள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால் அவர் தன்னை தானே எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். என்னிடம் பேசும் போது அவர் தன்னை எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதே போல் குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் வயதுக்கு ஏற்ப குழந்தையாக மாறி பேசுவார். தன்னை தானே வடிவமைத்து கொள்ளும் திறன் அவரிடம் அடங்கி உள்ளது " என தெரிவித்தார்.