சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் ஆகாசா ஏர் விமான சேவை இன்று முதல் தொடக்கம்!
சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் தினசரி இரு விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கி இருக்கும் 'ஆகாசா ஏர்' விமான சேவைக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் சமீபத்தில் அனுமதி அளித்தது. ஆகாசா விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் ஆகாசா ஏர் நிறுவனம், தனது விமான சேவையை தொடங்கியுள்ளது.இதன்மூலம், ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமான சேவை அளிக்கப்படும் 5வது நகரமாக சென்னை மாறியுள்ளது என்று இணை நிறுவனர் பிரவீன் ஐயர் கூறினார்.
சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் தினசரி இரு விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னை - கொச்சி இடையே அந்த நிறுவனம் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னை - மும்பை இடையே தினசரி கூடுதலாக ஒரு விமானத்தை இயக்க உள்ளதாகவும், செப்டம்பர் 26ஆம் தேதி முதல் சென்னை-பெங்களூரு இடையே தினசரி கூடுதலாக ஒரு விமானத்தை இயக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தென்னிந்தியாவின் கலாச்சாரத் தலைநகரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரத்துடன் இணைக்கிறது! என்று தெரிவித்துள்ளது.