இந்தியா-இஸ்ரேல் இடையிலான 'ஏர் இந்தியா' விமான சேவை ரத்து
இந்தியா-இஸ்ரேல் இடையிலான விமான சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ‘ஏர் இந்தியா’ அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது. அதை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை 'ஏர் இந்தியா' நிறுவனம் ரத்து செய்தது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 3-ந்தேதி மீண்டும் விமான சேவையை 'ஏர் இந்தியா' நிறுவனம் தொடங்கியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லி இடையே வாரத்திற்கு 4 விமானங்களை 'ஏர் இந்தியா' நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா-இஸ்ரேல் இடையிலான விமான சேவை 8-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக 'ஏர் இந்தியா' நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 'ஏர் இந்தியா' நிறுவனம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, இந்தியா-இஸ்ரேல் இடையிலான 'ஏர் இந்தியா' விமானங்களின் சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.