தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி 21-ம் தேதி கேதார்நாத், பத்ரிநாத் செல்ல உள்ளதாக தகவல்
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி வருகிற 21-ம் தேதி கேதார்நாத், பத்ரிநாத் புனித இடங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத், பத்ரிநாத் புனித இடங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரது வருகைக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
பிரதமரின் இமயமலைக் கோவில்கள் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அவர் கோவில்களில் பிரார்த்தனை செய்வார் என்றும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் முதலில் கேதார்நாத் சென்று பூஜை செய்துவிட்டு பின்னர் அங்கு நடைபெற்று வரும் பணிகளை மதிப்பீடு செய்வார். பின்னர் அவர் பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்து, பத்ரிநாத் மாஸ்டர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மதிப்பாய்வு செய்வார் என்று பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பிரதமர் மோடி, எல்லையோர கிராமமான மானாவுக்குச் சென்று கிராமவாசிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் உரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் முன்மொழியப்பட்ட பயணத்திற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நடந்து வருகின்றன.