அக்னிபத் போராட்டம்: 612 ரெயில்களை ரத்து செய்தது - இந்திய ரெயில்வே!


அக்னிபத் போராட்டம்: 612 ரெயில்களை ரத்து செய்தது - இந்திய ரெயில்வே!
x

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் 612 ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ராணுவம் உள்ளிட்ட முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.

அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில், இந்திய ரெயில்வே இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களை முன்னிட்டு 223 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 379 பயணிகள் ரெயில்கள் உள்ளிட்ட மொத்தம் 612 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதுதவிர, 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 6 பயணிகள் ரெயில்கள் பகுதியளவாக ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.


Next Story