அக்னிபத் போராட்டம்: ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு என தகவல்


அக்னிபத் போராட்டம்: ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு என தகவல்
x

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story