திருத்தப்பட்ட முறைப்படி ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் தேர்வு: அறிவிப்பு வெளியீடு
திருத்தப்பட்ட முறைப்படி அக்னி வீரர்கள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி,
ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இறுதியில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி முதலில் நுழைவுத்தேர்வு, பின்னர் உடல் தகுதித்தேர்வு, 3-வதாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என ராணுவம் சமீபத்தில் அறிவித்தது. இந்த திருத்தப்பட்ட முறைப்படி அக்னி வீரர்கள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
ராணுவத்தின் இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு நேற்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது, கல்வித்தகுதி, உடல் தகுதி நிலைகள் மற்றும் பிற தகுதிகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. அக்னிவீரர் தேர்வின் முதல் படியான பொதுத்தேர்வு ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.