சுரங்கத்தில் சிக்கிய பின்... தப்பிக்க செய்த யுக்தி - தொழிலாளியின் திகில் அனுபவம்
சுரங்கத்தில் சிக்கியதும் முதல் 18 மணிநேரம் வரை எங்களால் வெளியுலகுடன் எந்தவித தொடர்பையும் மேற்கொள்ள முடியவில்லை என கூறினார்.
புதுடெல்லி,
உத்தரகாண்டில் உத்தரகாசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு வந்தது. 17-வது நாளாக மீட்பு பணி நேற்றும் தொடர்ந்தது. இதற்காக டெல்லி, ஜான்சி பகுதிகளில் இருந்து நிபுணர்கள் வந்தனர்.
சுரங்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியின்போது, சுரங்கம் திடீரென இடிந்து விழுவதும், அதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதும் தொடர்ந்து வந்தது. சுரங்கத்தின் நுழைவு பகுதி வழியே, பல மீட்டர் நீள குழாயை செலுத்தி அதன்மூலம் தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்தது. மொத்தமுள்ள 57 மீட்டர்கள் தொலைவை அடைவதற்கான முயற்சிகள் நடந்து வந்தன.
இதுபற்றி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று காலையில் கூறும்போது, இடிபாடுகளுக்கு இடையே 52 மீட்டர்கள் தொலைவை மீட்பு குழுவினர் இதுவரை கடந்துள்ளனர். 5 மீட்டர் தொலைவிலேயே அவர்கள் உள்ளனர். இன்றைக்குள் தொழிலாளர்களை அவர்கள் அடைந்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.
இதேபோன்று, தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உதவியாக, ஆம்புலன்சுகள் வந்து செல்ல வசதியாக சாலை பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து துளை போட்டு தொழிலாளர்களை நெருங்கும் பணியும் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டது.
17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர், 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக நேற்று வெளியே கொண்டு வரப்பட்டனர். அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 57 மீட்டர் நீள ஸ்டீல் குழாயின் வழியே அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
இந்த சுரங்க விபத்து பற்றி அகிலேஷ் சிங் என்ற தொழிலாளி கூறும்போது, நான் சுரங்கத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக வெளியேறி கொண்டிருந்தேன். அப்போது, திடீரென சுரங்கம் எனக்கு முன்னால் இடிந்து விழுந்தது. ஒரு பெரிய சத்தமும் கேட்டது. இதனால், எனது காதுகள் மரத்து போய்விட்டன.
சுரங்கத்தில் சிக்கியதும் முதல் 18 மணிநேரம் வரை எங்களால் வெளியுலகுடன் எந்தவித தொடர்பையும் மேற்கொள்ள முடியவில்லை என கூறினார். இதன்பின்பு, வெளியே வருவதற்கான யுக்திகளை அவர்கள் கையாண்டனர்.
இதுபற்றி சிங் கூறும்போது, எங்களுக்கு கிடைத்த பயிற்சியின்படி, நாங்கள் சிக்கி கொண்டதும் தண்ணீர் குழாய் ஒன்றை திறந்து விட்டோம். அந்த நீர் வெளியே சென்றது. இதனால், உள்ளே உள்ளவர்கள் சிக்கி கொண்டார்கள் என்று வெளியே நின்றிருந்தவர்களுக்கு புரிந்து இருக்கும். அந்த தண்ணீர் குழாயில் நீர் வடிந்து நின்றதும், அதன் வழியே ஆக்சிஜனை உள்ளே செலுத்தி எங்களை காப்பாற்றினார்கள் என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, சுகாதார பரிசோதனைகளை செய்து கொண்ட பின்னர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். 2 மாதங்கள் வரை நன்றாக ஓய்வெடுப்பேன். அதன்பின்பு, அடுத்து என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்வேன் என கூறியுள்ளார்.