29 மணிநேரம் விடாமல்... மருத்துவ கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை


29 மணிநேரம் விடாமல்... மருத்துவ கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை
x

ராகிங்கால், மனதளவில் அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவர், இனி தொடர்ந்து படிக்க முடியாது. இதனை விட்டு விட்டு, வீட்டுக்கும் செல்ல முடியாது என்ற உணர்வுக்கு உந்தப்பட்டு உள்ளார்.

வயநாடு,

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கால்நடை கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவர் ஜே.எஸ். சித்தார்தன் (வயது 20). கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், விடுதியின் குளியலறையில் இருந்து அவருடைய உடல் கடந்த பிப்ரவரி 18-ந்தேதி மீட்கப்பட்டது.

சக மாணவர்கள் அவரை ராகிங் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர் என அவருடைய குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். இதில், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) மற்றும் சி.பி.ஐ.(எம்) மாணவர்களும் அடங்குவார்கள் என குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கின்றனர்.

இதுபற்றி கேரள போலீசார் விசாரணை செய்து, சி.பி.ஐ.யிடம் அறிக்கை அளித்தனர். அதில், மூத்த மாணவர்கள் மற்றும் சக மாணவர்களால் அந்த மாணவர், தொடர்ந்து 29 மணிநேரம் கொடுமைக்கு ஆளாகி உள்ளார். அதனால், உடல் மற்றும் மனதளவில் சித்ரவதைக்கு ஆளான சித்தார்தன், தற்கொலை முடிவுக்கு தூண்டப்பட்டு உள்ளார் என வழக்கை விசாரித்த காவல் துணை ஆய்வாளர் பி.வி. பிரஷோப் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, பிப்ரவரி 16-ந்தேதி காலை 9 மணியில் இருந்து, பிப்ரவரி 17-ந்தேதி மதியம் 2 மணி வரை தொடர்ந்து கைகளாலும், பெல்ட் கொண்டும் கொடூர முறையில் ராகிங் செய்துள்ளனர். இதனால், மனதளவில் அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவர், இனி இந்த கல்வி மையத்தில் தொடர்ந்து படிக்க முடியாது. படிப்பையும் நிறைவு செய்ய முடியாது. இதனை விட்டு விட்டு, வீட்டுக்கும் செல்ல முடியாது என்ற உணர்வுக்கு உந்தப்பட்டு உள்ளார். மனநிலை பாதித்து, தற்கொலை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை என உணர்ந்த அவர், ஆடவர் விடுதி குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இது பிப்ரவரி 18-ந்தேதி மதியம் 12.30 மணி முதல் 1.45 மணிக்குள் நடந்துள்ளது என காவல் துறை அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த வழக்கில், மத்திய அரசு உத்தரவின் பேரில் மறு எப்.ஐ.ஆர். ஒன்றை 20 பேருக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளது.

அவருடைய தந்தை ஜெயபிரகாஷ் கூறும்போது, மரணத்திற்கு 8 மாதங்களுக்கு முன்பிருந்து துன்புறுத்தல் தொடங்கி தொடர்ந்துள்ளது. எஸ்.எப்.ஐ. தலைவர்கள் கல்லூரியில் பல மாதங்களாக முகாமிட்டு இருந்தனர். இதில், அவருடைய மகனை ஆடைகளை களைய செய்து, முழங்கால் போட செய்து கொடுமைப்படுத்தினர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு, தடயங்களை அழிக்க முயல்கிறது.

சி.பி.ஐ.யிடம் வழக்கு விவரங்களை ஒப்படைக்காமல் இழுத்தடிக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதனை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றுள்ளது.


Next Story