"இந்த கிரக மக்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாக உள்ளனர்" ஐ.டி. நிறுவன அதிபர் உள்பட 2 பேர் கொடூர கொலை; ஜோக்கர் பெலிக்ஸ் கைது


இந்த கிரக மக்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாக உள்ளனர் ஐ.டி. நிறுவன அதிபர் உள்பட 2 பேர் கொடூர கொலை; ஜோக்கர் பெலிக்ஸ் கைது
x

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்திற்குள் புகுந்து ஐ.டி. நிறுவன அதிபர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை கொலை செய்தவர் அந்த நிறுவனத்தில் பணி செய்த முன்னாள் ஊழியரான பெலிக்ஸ்

பெங்களூரு

பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏரோனிக்ஸ் என்ற ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அதிபர் பனிந்திரா சுப்பிரமணியா ஆவார். மேலும் இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக விணுகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்கள் நேற்று வழக்கம்போல் நிறுவனத்தில் பணியில் இருந்தனர்.

அதாவது பனிந்திரா சுப்பிரமணியா முதல் தளத்தில் உள்ள தனது அறையிலும், விணுகுமார் 2-வது தளத்தில் உள்ள தன்னுடைய அறையிலும் இருந்தனர். இந்த நிறுவனத்தில் காவலாளி யாரும் பணியமர்த்தபடவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை நிறுவனத்துக்குள் மர்ம நபர்கள் திடீரென நுழைந்தனர். அவர்களைப் பார்த்த வரவேற்பாளர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் என்ன, ஏது என்று சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர்கள் அதிரடியாக முதல் மற்றும் 2-வது தளத்தில் இருந்த பனிந்திரா சுப்பிரமணியா மற்றும் விணுகுமார் ஆகியோரின் அறைகளில் தலா 2 பேராக பிரிந்து புகுந்தனர்.

அவர்களைப் பார்த்த பனிந்திரா சுப்பிரமணியா மற்றும் விணுகுமார் ஆகியோர் சுதாரித்து அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களை வெளியே விடாமல், மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் தயாராக வைத்திருந்த கத்தி, வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர்.

இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்த அதிர்ச்சியில் கம்பெனி ஊழியர்கள், அந்த கட்டிடத்தில் மற்ற தலங்களில் இருந்தவர்களும் பீதியில் உறைந்து போயினர். பின்னர் இதுகுறித்து கட்டிடத்தில் இருந்தவர்கள் அம்ருதஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து மோப்ப நாய்கள் அங்கு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிசென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன்பின்னர் கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். போலீசாரும் சில தடயங்களை கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் பனிந்திரா சுப்பிரமணியா மற்றும் விணுகுமார் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்திற்குள் புகுந்து ஐ.டி. நிறுவன அதிபர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை கொலை செய்தவர் அந்த நிறுவனத்தில் பணி செய்த முன்னாள் ஊழியரான பெலிக்ஸ் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கும், ஐ.டி. அதிபர் பனிந்திரா சுப்பிரமணியாவுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தொழிலில் போட்டியை விரும்பாத பெலிக்ஸ், ஐ.டி. அதிபர் பனிந்திரா சுப்பிரமணியா மற்றும் செயல் அதிகாரி விணுகுமாரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று மாலை 4 மணி அளவில் அந்த கட்டிடத்திற்கு தனது கூட்டாளிகள் 3 பேருடன் சென்றார்.

பின்னர் அவர்கள் பனிந்திரா சுப்பிரமணியா மற்றும் விணுகுமாரை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய பிலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வந்தார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு போலீசார், தும்கூரு அருகே பெலிக்ஸ், வினய் ரெட்டி, சந்தோஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெலிக்ஸ் என்ற ஜோக்கர் பெலிக்ஸ், ஏரோனிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வணிகப் போட்டியின் காரணமாக ஏரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டியான பனிந்தர சுப்பிரமணியாவை பழிவாங்கும் பொருட்டு பெலிக்ஸ் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், சி.இ.ஓ., விணுகுமாரை கொல்வது நோக்கம் அல்ல எனவும், பனிந்தர சுப்பிரமணியாவை தாக்கும் போது, குறுக்கிட்டதால், அவரையும் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிக்டாக்கில் புகழ்பெற்ற ஜோக்கர் பெலிக்ஸ், தன்னை ஒரு கன்னட ராப்பர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, ராப் பாடல்கள் பாடுவது போன்ற சில வீடியோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

joker_felix_rapper என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும், JF Media என்ற யூடியூப் சேனலும் ஜோக்கர் பெலிக்ஸுக்கு உள்ளது. அதில் அவரை ஆயிரக்கணக்கான நபர்கள் பின்பற்றுகின்றனர்.

சம்பவம் நடைபெறுவதற்கு ஏறக்குறைய ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு ஜோக்கர் பெலிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "இந்த கிரக மக்கள் அனைவரும் முகஸ்துதி பாடுபவர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கின்றனர். அதனால் நான் இந்த கிரக மக்களை காயப்படுத்துகிறேன். நான் கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துகிறேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தவில்லை." என பதிவிடப்பட்டுள்ளது.

கொலை நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலை நடந்த செய்தியை அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டசாக பதிவிட்டுள்ளார். அன்று இரவு 10 மணி வரை அவர் தனது இன்ஸ்டாவில் ஆக்டிவாகவே இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உள்ள பெலிக்ஸின் பதிவுகளின்படி, டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாப்பாத்திரத்தால் அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.


Next Story