ஜாபர் சாதிக் மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு


ஜாபர் சாதிக் மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு
x

கோப்புப்படம்

ஜாபர் சாதிக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

புதுடெல்லி,

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்றும், கைதை எதிர்த்தும் ஜாபர்சாதிக் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து ஜாபர் சாதிக் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அரிகரன், மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி, 'இந்த மேல்முறையீட்டு மனு குறித்து விரிவாக வாதிட வேண்டியுள்ளது. நேரமின்மை காரணமாக வாதிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால் விசாரணையை வேறொரு நாளுக்கு தள்ளிவைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்ற நீதிபதிகள், ஜாபர் சாதிக் மற்றும் அவரது தந்தையின் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story