வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் யு.பி.ஐ. பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை-என்.பி.சி.ஐ. விளக்கம்
வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் யு.பி.ஐ. பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை என்று என்.பி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
போன்பே, ஜிபே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
ஆனால் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ. பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை என தேசிய கட்டண கழகம் (என்.பி.சி.ஐ.) விளக்கம் அளித்து உள்ளது. பி.பி.ஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியைக் கொண்டு, ரூ.2000-க்கு மேல் வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றத்துக்குதான் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 1.1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் என்.பி.சி.ஐ. தெளிவுபடுத்தி உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாலட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றொரு நிறுவனத்தின் வாலட்டை வைத்திருக்கும் வணிகருக்கு பணம் செலுத்தும்போது. ஒன்றோடொன்று இயங்கக்கூடிய செலவுகளை ஈடுகட்ட இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் என்.பி.சி.ஐ. கூறியுள்ளது. முன்னதாக, வங்கிக்கணக்கு அல்லது பி.பி.ஐ., வாலட்டில் இருந்து பணம் செலுத்துவதற்கு எந்த வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த வேண்டாம் என பேடிஎம் நிறுவனமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.