3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கலபுரகியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பல்லாரி விம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 நோயாளிகள் உயிர் இழந்த சம்பவம் குறித்து உயா்மட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, உயர்மட்ட குழுவினரும் விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அந்த குழுவினர் அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் செல்லவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்.
சித்தராமையா கோபம் அடைவது, குற்றச்சாட்டு கூறுவது, அவரை சார்ந்தது. நமது அரசு, நமது அதிகாரிகள், மந்திரிகள் தங்களது கடமை செய்து பணியாற்றுவார்கள். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அவர் மீது பதிவான வழக்குகளில் நிரபராதியாக வெளியே வந்திருக்கிறார். அதுபோல், இந்த வழக்கிலும் எடியூரப்பா தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்து நிரபராதியாக வெளியே வருவார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.