ஆதித்யா விண்கலம் துல்லியமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்


ஆதித்யா விண்கலம் துல்லியமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
x

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆதித்யா விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும்.

புதுடெல்லி,

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும்.

இந்த நிலையில் இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, "ஆதித்யா விண்கலம் எல்1 சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆதித்யா சரியான இடத்தில் உள்ளதா என்று சில மணிநேரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆதித்யாவில் உள்ள எரிபொருளைக் கொண்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் விண்கலம் செயல்படும்" என்று கூறினார்.


Next Story