டிராக்டர் மீது கார் மோதி பயங்கர விபத்து: நிகழ்விடத்திலேயே 4 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர்
பெங்களூர்,
கர்நாடகா மாநிலம், பாகல்கோட் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகமாக உள்ளது. குளிர் மற்றும் மூடுபனி காரணமாக இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு விபத்து இப்பகுதியில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
பாகல்கோட் மாவட்டம், பாகலாகி தாலுகா தும்பரம்மிட்டி கிராஸ் அருகே, ஹூப்ளியின் சோலாப்பூர்- தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு நிரம்பிய டிராக்டர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது விஜயபுரா மாவட்டம் பாதாமியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஹொனகனஹள்ளிக்கு காரில் வந்துள்ளனர். அவர்கள் வந்த கார், கரும்பு டிராக்டரில் பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டர் அடியில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் காரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பரகி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்