மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு


மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு
x

மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கொன்சம் கேடா சிங் விரைவாக மீட்கப்பட்டார்.

இம்பால்,

மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காண, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோன்சம் கேடா சிங் என்ற ராணுவ அதிகாரியை நேற்று காலை 9 மணியளவில் அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார். ஒடிசா மாநிலத்தில் தற்போது பணிபுரித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான மணிப்பூருக்கு வந்துள்ளார். இவரது கடத்தல் தொடர்பாக கோன்சமின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை எண் 102-ல் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் கொன்சம் கேடா சிங் மீட்கப்பட்டார். மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் விரைவாக மீட்கப்பட்டார். தற்போது தவ்பால் மாவட்டத்தில் உள்ள காச்சிங் அருகே வைகோங் காவல் நிலையத்தில் உள்ளார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில், அதிகாரி கோன்சம் கேடா சிங் குடும்பத்துக்கு கடந்த காலங்களில் கடத்தல் மிரட்டல் கிடைத்ததாகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காக கடத்தல் நடைபெற்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று நடந்திருப்பது 4-வது சம்பவம். கடந்த பிப்ரவரி 27ம் தேதி இம்பாலில் கூடுதல் எஸ்.பி. ஒருவர் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story