கெஜ்ரிவாலை பதவி நீக்க கோரி ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி மனு; டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்


கெஜ்ரிவாலை பதவி நீக்க கோரி ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி மனு; டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்
x

கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்க கோரி சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல மனுக்களை விசாரிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், 6 மாத சிறைவாசத்திற்கு பின்னர், சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர் கைது செய்தனர். அவரை ஏப்ரல் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக அவருடைய தரப்பில் இருந்து டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், இதுபற்றி நேற்று நடந்த விசாரணையில், அவருடைய கைது சட்டவிரோதமல்ல என கூறி கெஜ்ரிவாலை அமலாக்க துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி சுவர்ண காந்த சர்மா பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கெஜ்ரிவால் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவி நீக்க கோரி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மந்திரி சந்தீப் குமார் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுபற்றிய மனு, நீதிபதி மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் மீது அதிருப்தி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் கவர்னர் ஒரு முடிவு மேற்கொள்வார் என தெரிவித்தது. நாங்கள் அதனை செய்ய முடியாது. கோர்ட்டில் அரசியல் பேச்சுகளை வெளியிட வேண்டாம். எங்களை அரசியலில் சிக்க வைக்க முயற்சிக்கின்றீர்கள் என டெல்லி ஐகோர்ட்டு அமர்வு கண்டனம் தெரிவித்தது.

ஒரே கோரிக்கையுடன் வந்துள்ள 3-வது மனு இது என தெரிவித்த கோர்ட்டு, இதற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்ற மனுக்களை கட்டுப்படுத்த ஒரே வழி இதுவாகும் என்றும் தெரிவித்தது. சந்தீப், மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, சமூக நலம் உள்ளிட்ட துறைகளின் முன்னாள் மந்திரியாக பதவி வகித்ததுடன், சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர்.

அவர் தன்னுடைய மனுவில், சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால், அரசியல் சாசனத்தின்படி டெல்லியின் முதல்-மந்திரியாக பதவி வகிக்க முடியாது என குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு சந்தீப்புக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய சி.டி. ஒன்று வெளியானது. பெண்ணுடன் தகாத முறையில் இருப்பது போன்ற சி.டி.யால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டில், மக்களவை தேர்தலின்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில், டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சமீபத்தில், கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்க கோரி 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், இவற்றை விசாரிக்க முடியாது என ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.


Next Story