சேற்றில் சிக்கி காட்டு யானை செத்தது


சேற்றில் சிக்கி காட்டு யானை செத்தது
x
தினத்தந்தி 2 July 2023 3:30 AM IST (Updated: 2 July 2023 10:43 AM IST)
t-max-icont-min-icon

சக்லேஷ்புராவில் குட்டையில் தண்ணீர் குடிக்க வந்தபோது சேற்றில் சிக்கி காட்டு யானை செத்தது.

ஹாசன்-

சேற்றில் சிக்கிய காட்டு யானை

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மாதசாகர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு தேடி காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து ெவளியேறியது. அந்த யானை, கிராமத்தையொட்டி உள்ள காபி தோட்டத்துக்கு சென்றது. பின்னர் அந்த காட்டு யானை, காபி ேதாட்டத்தையொட்டி உள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றது.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக குட்டையின் அருகே கிடந்த சேற்றில் காட்டு யானை சிக்கிக் கொண்டது. இதனால் சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த யானை பரிதவித்தது. மேலும் இரவு முழுவதும் பிளிறி கொண்டே இருந்தது.

செத்தது

இந்த நிலையில் நேற்று காலை அந்தப்பகுதி மக்கள் காபி தோட்டத்துக்கு சென்றபோது தான் காட்டு யானை சேற்றில் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அதிகாரிகள் விரைந்து வந்து சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் அந்த காட்டு யானை பரிதாபமாக செத்தது.

இதையடுத்து வனத்துறையினர் கால்நடை டாக்டரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அதே இடத்தில் வைத்து காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து காட்டு யானையை வனத்துறையினர் குழிதோண்டி புதைத்தனர்.

யானைகள் கூட்டத்துக்கு தலைவி

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஷீலா கூறுகையில், 'இது 25 வயது நிரம்பிய பெண் யானை ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த யானை வனத்துறையினரிடம் பிடிபட்டது. அந்த யானைக்கு ரேடியோ காலார் கருவி பொருத்தப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. அதற்கு 'காந்தி' எனவும் பெயரிடப்பட்டது. இது, 21 யானைகளை கொண்ட குழுவுக்கு தலைவியாக இருந்து வந்தது. சமீபத்தில் தான் காந்தி யானை குட்டி ஒன்றை ஈன்றிருந்தது' என்றனர்.


Next Story