உத்திரபிரதேசம்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு


உத்திரபிரதேசம்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Nov 2023 9:46 PM IST (Updated: 17 Nov 2023 9:48 PM IST)
t-max-icont-min-icon

நெஞ்சு வலித்ததால் வாயு என நினைத்து அசிடிட்டி மாத்திரை சாப்பிட்ட 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கோரக்பூர்,

முன்பெல்லாம் மாரடைப்பு என்பது 60 வயதைக் கடந்த முதியவர்கள் அல்லது இணை நோய் இருப்போருக்கு மட்டுமே ஏற்படும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இந்த நிலை இப்போது மாறிவிட்டது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் திடீர் திடீரென இதுபோல மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் மாரடைப்பால் 28 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் குமார். இவர் அந்த பகுதியை சேர்ந்த ரயில்வே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரிக்கு தனது நண்பர்களை சந்திக்க அபிஷேக் சென்றுள்ளார்.

தனது நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனை வாயு என நினைத்து அசிடிட்டி மருந்தை சாப்பிட்டுள்ளார். மருந்து சாப்பிட்ட பிறகும் வலி குறையாததால் நண்பரின் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அபிஷேக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பால் இளம்வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாகவே இதுபோல திடீர் திடீரென இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருமணத்தில் நடனமாடும்போது, ஜிம்மில் ஓர்க்அவுட் செய்யும் போது, சாலையில் காத்திருக்கும் போது என திடீர் திடீரென மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது..


Next Story