பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும்; மேகாலயா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும்; மேகாலயா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 6:28 PM IST (Updated: 25 Jun 2023 7:28 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும் என மேகாலயா ஐகோர்ட்டு வழக்கு ஒன்றில் அளித்த பரபரப்பு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஷில்லாங்,

மேகாலயாவில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டார் என சிறுவன் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை நீக்க கோரி மேகாலயா ஐகோர்ட்டில் மனுதாரர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், மனுதாரர் பல்வேறு வீடுகளில் வேலை செய்து வந்து உள்ளார். அப்போது, சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மனுதாரரின் மாமா வீட்டில் வைத்து இருவர் இடையே பாலியல் உறவு நடந்து உள்ளது என தெரிய வந்து உள்ளது.

ஆனால், அந்த மனுவில் மனுதாரர், பாலியல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த வழக்கு இல்லை. கருத்தொருமித்த செயலே ஆகும். சிறுமி தனது வாக்குமூலத்தில், மனுதாரரின் காதலி என்றும் கட்டாயம் எதுவுமின்றி உறவுக்கு ஒப்புதல் அளித்தது பற்றியும் கூறியுள்ளார் என மனுதாரர் வாதிட்டு உள்ளார்.

மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி இருவரும் காதல் உறவிலேயே இருந்து உள்ளனர் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதுபற்றி மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி டபிள்யூ. தீங்தோ வெளியிட்ட தீர்ப்பில், 16 வயதில் உடல் மற்றும் மனரீதியாக ஒருவர் நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பார். அவர்களது சுகாதார நலன் பற்றி, பாலியல் உறவில் ஈடுபடுவது உள்பட அவர்களுக்கு சுயநினைவுடனான முடிவை எடுப்பதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருப்பார்கள் என கருதுவது நியாயம்.

இதனால், சிறுமி வாக்குமூலம் மற்றும் மனுதாரரின் ஆவணங்கள் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது, சிறுமியின் வாக்குமூலம் மனுதாரருக்கு ஆதரவாக அமைந்து உள்ளது என கூறியுள்ளார். இதனால், இதில் குற்ற உள்நோக்கம் எதுவும் இல்லை என கோர்ட்டு முடிவு செய்தது. முடிவில், மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story