அருவியின் தடாகத்தில் தவறி விழுந்து 4 மாணவிகள் சாவு; 'செல்பி' எடுக்க முயன்றபோது பரிதாபம்


அருவியின் தடாகத்தில் தவறி விழுந்து 4 மாணவிகள் சாவு; செல்பி எடுக்க முயன்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே, அருவி தடாகத்தில் தவறி விழுந்து 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

பெலகாவி:

சுற்றுலா சென்றனர்

கர்நாடகம்-மராட்டிய மாநிலங்களின் எல்லை பகுதியில் பெலகாவி அருகே கித்வாடா அருவி உள்ளது. சுற்றுலா தலமான இங்கு வார விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் பெலகாவி டவுனில் உள்ள மதராசா கல்லூரியில் படித்து வரும் 40 மாணவிகள் நேற்று கித்வாடா அருவிக்கு சுற்றுலா சென்று இருந்தனர்.

இந்த நிலையில் அருவியின் உச்சியில் நின்று கொண்டு மாணவிகளான ஆசியா முஜாவர் (வயது 17), குட்ஷியா (20), ருஸ்கஷர் பஸ்தி (20), தஸ்மியா (20) உள்பட 5 மாணவிகள் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது ஆசியா எதிர்பாராதவிதமாக அருவியின் உச்சியில் இருந்து தடாகத்தில் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 4 மாணவிகளும், ஆசியாவை காப்பாற்ற தடாகத்தில் குதித்தனர்.

4 மாணவிகள் சாவு

ஆனால் 5 பேரும் தடாகத்தில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சக மாணவிகள் கதறினர். சம்பவம் பற்றி அறிந்ததும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் 5 மாணவிகளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆசியா, குட்ஷியா, ருஸ்கஷர், தஸ்மியா ஆகியோர் உயிரிழந்தனர். ஒரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தங்களது மகள்கள் உயிரிழந்தது பற்றி அறிந்ததும் பெலகாவி கிம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு பெற்றோர் கூடினர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதன்காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் 4 மாணவிகளின் உடல்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது கல்நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story