35 லட்சம் பேரின் 'ரீபண்ட்' கோரிக்கைகள் நிறுத்திவைப்பு - வருமான வரித்துறை


35 லட்சம் பேரின் ரீபண்ட் கோரிக்கைகள் நிறுத்திவைப்பு - வருமான வரித்துறை
x

35 லட்சம் பேரின் ‘ரீபண்ட்’ கோரிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

7 கோடி கணக்கு தாக்கல்

வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த நிதி ஆண்டுக்கான 7 கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 7 கோடியே 15 லட்சம் கணக்குகள், வரி செலுத்துவோரால் சரிபார்க்கப்பட்டன. அவற்றில், 6 கோடியே 80 லட்சம் கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம். அதாவது, சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 93.5 சதவீத கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம்.

நேரடி வரி வசூல்

நேரடி வரிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.9 லட்சத்து 57 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதவிர, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி 'ரீபண்ட்' (திருப்பி அளிக்கும் தொகை) அளித்துள்ளோம். நிதி ஆண்டு முடியும்போது, பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட நேரடி வரி வசூல் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

ரீபண்ட்

அதே சமயத்தில், 35 லட்சம் பேருக்கு தர வேண்டிய 'ரீபண்ட்' நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், அவர்கள் அளித்த தகவல்கள் ஒத்துப்போகவில்லை. வங்கி கணக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது வங்கி, பிற வங்கியுடன் இணைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ஐ.எப்.எஸ்.சி. எண் மாறி இருக்கலாம். அதனால், அந்த வரி செலுத்துவோரை வருமான வரித்துறை ஊழியர்கள் சிறப்பு கால்சென்டர் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்படும். வரி செலுத்துவோரின் சரியான வங்கி கணக்கில் 'ரீபண்ட்' செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

புதிய வருமான வரி

வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்காத புதிய வருமான வரி திட்டம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 60 முதல் 70 சதவீத தனிநபர்கள், அந்த புதிய திட்டத்துக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story