நாட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் 352 பேர் பலி; 2-வது இடத்தில் தமிழகம்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது 352 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையில் எம்.பி. ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் 352 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இவற்றில் உத்தர பிரதேசம் (57) முதல் இடத்திலும், தமிழகம் (46) 2-வது இடத்திலும், புதுடெல்லி (42) 3-வது இடத்திலும் உள்ளன. 4-வது இடத்தில் அரியானா (38) உள்ளது என தெரிவித்து உள்ளார்.
அவர் தொடர்ந்து தனது பதிலில், நாட்டில் தற்போது மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது குறைந்த அளவாக, கேரளா மற்றும் சத்தீஷ்காரில் தலா ஒருவரும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 2 பேரும், சண்டிகார், தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் உத்தரகாண்டில் தலா 3 பேரும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.