மெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது


மெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது
x
தினத்தந்தி 22 May 2024 1:49 PM IST (Updated: 22 May 2024 2:06 PM IST)
t-max-icont-min-icon

கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள் எழுதிய விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களிலும், சில ரெயில்களிலும் அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி இருந்தது.

மேலும் இதுதொடர்பான புகைப்படங்களை ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தபோது, அந்த மிரட்டல் வாசகங்களை எழுதியவர் மீது இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அம்மாநில மந்திரி அதிஷி கேள்வி எழுப்பி இருந்தார்.

சில மெட்ரோ ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி போலீசில் புகார் அளித்து இருந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சியில் சைன்போர்டுகளில் ஒரு இளைஞர் சுவர்களில் எழுதுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கித் கோயல் உயர்கல்வி கற்றவர் என்றும், வங்கியில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story