4-வது மாடியில் இருந்து ராட்சத தண்ணீர் தொட்டி விழுந்து 3 பேர் பலி; தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்


4-வது மாடியில் இருந்து ராட்சத தண்ணீர் தொட்டி விழுந்து 3 பேர் பலி; தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிவாஜிநகரில் 4-வது மாடியில் இருந்து ராட்சத தண்ணீர் தொட்டி விழுந்து 3 பேர் பலியானார்கள். தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்டவர்களுக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

சிவாஜிநகர்:

பெங்களூரு சிவாஜிநகர் பஸ் நிலையம் அருகே 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் ராட்சத பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதற்காக சுவர்கள் எழுப்பி, அதன்மீது அந்த தண்ணீர் தொட்டியை வைத்திருந்தார்கள். அந்த கட்டிடத்தின் கீழே தள்ளுவண்டியில் துரித உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அந்த தள்ளுவண்டி கடையில் நின்று சிலர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று 4-வது மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்தது. பின்னர் 4-வது மாடியில் இருந்து அந்த ராட்சத தண்ணீர் தொட்டி கீழே விழுந்தது. அப்போது தள்ளுவண்டி கடையில் நின்று சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர் மீது ராட்சத தண்ணீர் தொட்டி விழுந்து அமுக்கியது.

இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடியவரை மீட்டு பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த நபரும் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனால் தண்ணீர் தொட்டி விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் மற்றும் கமர்சியல் தெரு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் சிவாஜிநகரை சேர்ந்த தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அருள் (வயது 40), கடையில் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் கோடா நாகேஷ்வர ராவ் (32), கரண் தாபா (31) என்பது தெரியவந்தது. தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் பவுரிங் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

4 மாடி கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டு இருந்த ராட்சத பிளாஸ்டிக் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்துள்ளது. இதனால் தொட்டி வைக்கப்பட்டு இருந்த சுவர் சிதிலமடைந்துள்ளது. இதன்காரணமாக தண்ணீர் தொட்டியின் எடை தாங்க முடியாமல் சுவர் இடிந்ததால், 4-வது மாடியில் இருந்து தொட்டி கீழே விழுந்து 3 பேர் பலியாக நேரிட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் சிவாஜிநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.


Next Story