பராமரிப்பு பணி காரணமாக தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
கோவை - நிஜாமுதின், திருநெல்வேலி - பிலாஸ்பூா் உள்ளிட்ட விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
தெற்கு மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட காசிபேட் - பாலா்ஷா இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 வாராந்திர ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
கோவை - நிஜாமுதின் கொங்கு விரைவு ரெயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.3, 10 தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படும். திருநெல்வேலி - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.2, 9 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
மேலும், கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளத்தில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் உத்தர பிரதேசம், பீகார், சத்தீஸ்கா் மாநிலங்களுக்குச் செல்லும் ஹம்சாபா், ராப்திசாகா் உள்ளிட்ட 24 விரைவு ரெயில்கள் டிச.30 முதல் ஜன.13-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும், என்று கூறியுள்ளது.
மேலும் டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் கரீப் ரத் அதிவிரைவு ரெயில் ஜன.1, 8 தேதிகளில் வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல் வழியாக வருவதற்கு பதிலாக பெத்தப்பள்ளி, நிஷாமாபாத், காச்சிக்கூடா, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். இதேபோல், சென்னை சென்டிரல் - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயில் (எண்:12851/12852) விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.