நாடு முழுவதும் 200 ரெயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் - மத்திய மந்திரி


நாடு முழுவதும் 200 ரெயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் - மத்திய மந்திரி
x

நாடு முழுவதும் 200 ரெயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

அவுரங்காபாத்,

நாடு முழுவதும் 200 ரெயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

"47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன. 200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. பிராந்திய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான தளமாக இந்த ரெயில் நிலையங்கள் செயல்படும்.

எதிர்காலத்தில் இந்தியாவில் 400 'வந்தே பாரத்' ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும்.

அவுரங்காபாத்தில் உள்ள ரெயில் பெட்டி பராமரிப்பு வசதி 18 பெட்டிகள் திறன் கொண்டது. மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே, இந்த திறனை 24 பெட்டிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்" என்று கூறினார். மேலும் தன்வேயின் கோரிக்கையை பரிசீலனை செய்து அடுத்த 15 நாட்களில் முன்மொழிவை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு வைஷ்ணவ் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில ரெயில்வே மந்திரியும் ஜல்னா எம்.பி.யுமான ராவ்சாகேப் தன்வே, மராட்டிய மாநிலத்திற்கு 1,100 கோடி ரூபாயாக இருந்த நிதியை மத்திய அரசு உயர்த்தி 11,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று கூறினார். மேலும், மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத், புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள அவுரங்காபாத்-புனே விரைவு வழித்தடத்தில் அதிவேக ரெயில் திட்டங்களை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story