மூடிகெரேவில் காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்
மூடிகெரேவில் காபி தோட்டத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது.
சிக்கமகளூரு:-
காட்டுயானை அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டுயானைகள் வெளியேறி விளை நிலங்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் தோட்டத்திற்கு விவசாயிகள் செல்ல முடியாத வகையில் காட்டுயானைகள் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தநிலையில் வனப்பகுதிக்குள் இருந்து வந்த 2 காட்டுயானைகள் விளைப்பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளன. ஆல்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் காபி தோட்டத்திற்குள் புகுந்த அந்த காட்டுயானைகள், அங்கிருந்த செடிகளை பிடுங்கி எரிந்துவிட்டு சென்றனர்.
விளைப்பயிர்கள் நாசம்
இதேபோல அதே பகுதியை சேர்ந்த மோகன் என்ற விவசாயியின் தோட்டத்திற்கு புகுந்த காட்டுயானைகள், பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காபி பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இருப்பினும் கிராமமக்கள் வனத்துறையினரை விடவில்லை. காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுப்பதுடன், சேதப்படுத்திய விளைப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து சென்றனர்.