விமானத்தில் வந்து ஏ.டி.எம்.மை உடைத்து திருடிய 2 பேர் கைது


விமானத்தில் வந்து ஏ.டி.எம்.மை உடைத்து திருடிய 2 பேர் கைது
x

விமானத்தில் வந்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி, ஏ.டி.எம்.மை உடைத்து ரூ.10 லட்சத்து 72 ஆயிரம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த மாதம் ஒரு ஏ.டி.எம்.மை உடைத்து பணம் திருடப்பட்டு இருந்தது. ரூ.10 லட்சத்து 72 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கை ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். அவர்களுக்கு கிடைத்த துப்பு அடிப்படையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இருந்து 2 பேர் ஆமதாபாத்துக்கு விமானத்தில் வந்து ஏ.டி.எம். திருட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அமர்ஜோத்சிங் அரோடா உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டலில் தங்கினர்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களின் திருட்டு பாணி தெரிய வந்தது. அவர்கள் சண்டிகாரில் இருந்து விமானத்தில் வந்து ஆமதாபாத் விமான நிலையம் அருகே ஒரு ஓட்டலில் தங்கினர். போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஓட்டல் அறையை முன்பதிவு செய்திருந்தனர்.

மேலும், ஆன்லைன் வணிக தளத்தில் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினர். கேஸ் கட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றையும் வாங்கினர்.

கூகுள் வரைபடம் மூலம் ஏ.டி.எம். தேர்வு

எந்த ஏ.டி.எம்.மில் திருடலாம் என்பதை கூகுள் வரைபடம் உதவியுடன் தேர்வு செய்தனர். அதன்படி, அந்த ஏ.டி.எம்.முக்கு சென்று, கேஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம்.மை உடைத்தனர். பின்னர், ரூ.500 நோட்டுகளாக இருந்த பணத்தை அள்ளிப்போட்டனர்.

ஓட்டலுக்கு திரும்பி, தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டனர்.

இதுபோல், விமானத்தில் சென்று பல ஊர்களில் ஏ.டி.எம்.களை உடைத்து அவர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

கைதானவர்களில் ஒருவரான அமர்ஜோத்சிங் அரோடா, ஏற்கனவே கடந்த 2005-ம் ஆண்டு மொகாலியில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், 2010-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் மராட்டிய மாநிலத்தில் ஏ.டி.எம்.களை உடைக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். கொலை, வழிப்பறி தொடர்பாக, பெங்களூருவில் அவர் மீது 4 வழக்குகள் உள்ளன.


Next Story