பாலக்காடு அருகே 185 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்


பாலக்காடு அருகே 185 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்
x

பாலக்காடு அருகே 185 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்காடு:

மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்தாஸ்க்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு வரக்கூடிய மீன் லாரிகள், பலசரக்கு பொருட்கள் நிறைந்த லாரிகள் மற்றும் அரிசி கடத்தி வரும் லாரிகளில் பெரும் அளவு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆந்திராவில் இருந்து கேரளா வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்தாஸ் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பெருந்தல் மண் போலீசார் பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது ஒரு கன்டெய்னர் லாரி ஒன்று மிக வேகமாக வந்தது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியின் உள்ளே மீன்கள் பெட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மீன் பெட்டிகளை அகற்றி உள்ளே பார்த்தபோது லாரிக்கு உள்ளே ஒரு ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரகசிய அறைக்குள் 185 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த கண்ணூர் அருகே உள்ள முலப்பிலங்காடு கர்ஷாத் (வயது 25), இவரது நண்பர் காலாட்டு குன்னம் பகுதியைச் சேர்ந்த முகமது (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் பெருந்தல் மண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story