2 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்


2 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்
x

File image

2023ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சத்தா, "இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு எவ்வளவு பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அதற்கானகாரணங்கள் என்ன" என்பது குறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை-மந்திரி கீர்த்திவர்தன் சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், 2023-ம் ஆண்டில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை அரசும் அங்கீகரிக்கிறது. வெற்றிகரமான, வளமையான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் சொத்தாக திகழ்கின்றனர். அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டை காட்டிலும் 2023ம் ஆண்டு சற்று குறைந்துள்ளது.

2022ம் ஆண்டு 2 லட்சத்து 25 ஆயிரத்து 620 பேரும், 2021ம் ஆண்டு 1 லட்சத்து 63 ஆயிரத்து 370 பேரும், 2020ம் ஆண்டு 85 ஆயிரத்து 256 பேரும், 2019ம் ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 17 பேரும் வெளிநாடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story