ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
கோலாரில் ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.
கோலார்
ஓட்டல் உரிமையாளர்
கோலார் டவுனில் உள்ள சித்த முனீஸ்வரா நகரில் வசித்து வருபவர் நவீன் ஷெட்டி. இவர் அப்பகுதியில் சகானா தர்ஷினி என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டல் கோலாரில் மிகவும் பிரபலமான ஓட்டல் என்று கூறப்படுகிறது.
நவீன் ஷெட்டி தினமும் இரவு 10.45 மணியளவில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஓட்டலை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் கடந்த மாதம்(செப்டம்பர்) 17-ந் தேதி அன்று இரவு 10.45 மணிக்கு நவீன் ஷெட்டி வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார். அப்போது அவர் ஓட்டலில் வசூலான பல லட்சம் ரூபாயை தனது கைப்பையில் வைத்திருந்தார்.
பணப்பை
அவர் தனது வீட்டின் முன்பு சென்று ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கேட்டை திறக்க முயன்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், நவீன் ஷெட்டியை இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவரிடம் இருந்த பணப்பையை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் நவீன் ஷெட்டி பணப்பையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதற்கிடையே அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட நவீன் ஷெட்டியின் மகன் வீட்டில் இருந்து ஓடி வந்து தனது தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மர்ம நபர்கள் தாக்கினர். இதற்கிடையே அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.
ஒருவர் சிக்கினார்
இதைப்பார்த்த மர்ம நபர்கள் கொள்ளை திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். அப்போது ஒருவர் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். மற்ற 2 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் மது(வயது 24) என்பதும், அவர் நவீன் ஷெட்டி நடத்தி வரும் ஓட்டலின் அருகே ஒரு மதுபான பாரில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
ரூ.1,000 தேவை
மேலும் அந்த பாரில் இருந்து வேலையை விட்டு நின்ற மது பின்பு, பெங்களூருவுக்கு சென்று அங்குள்ள ஒரு மதுபான பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கு அபிஷேக், மனோஜ் ஆகிய 2 பேரும் நண்பர்கள் ஆனார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெங்களூருவில் 3 பேரும் மது குடித்துள்ளனர். பின்னர் அபிஷேக் தனது மோட்டார் சைக்கிளுக்கு என்ஜின் ஆயில் மாற்ற முடிவு செய்தார்.
அதற்காக அவருக்கு ரூ.1,000 தேவைப்பட்டுள்ளது. ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்றும், ரூ.1,000 கடனாக தந்து உதவுமாறும் மதுவிடம் கேட்டுள்ளார்.
திட்டம் தீட்டினர்
அப்போது அவர் கோலாருக்கு சென்று கொள்ளையடிக்கலாம் என்று ஆசை காட்டி இருக்கிறார். அதையடுத்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோலாருக்கு வந்தனர். பின்னர் நவீன் ஷெட்டியிடம் பணத்தை கொள்ளையடித்து விடலாம் என்று மது கூறியிருக்கிறார். அதையடுத்து 3 பேரும் திட்டம் தீட்டி உள்ளனர்.
அதன்பின்னர் 3 பேரும் சேர்ந்து நவீன் ஷெட்டியை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த அபிஷேக், மனோஜ் ஆகிய 2 பேரையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர்கள் குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.