பெங்களூருவில் 190 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை- துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


பெங்களூருவில் 190 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை- துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண 190 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உள்கட்டமைப்பு வசதிகள்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீளமான மேம்பாலம் அமைக்க டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுகுறித்து பலர் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், வாகன நெரிசலுக்கு தீர்வு, சுரங்கப்பாதைகள், சாலைகளை அகலப்படுத்துதல் குறித்தும் ஆலோசனை வந்துள்ளது.

நாங்கள் சர்வதேச டெண்டர் விட்டதால் 9 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த டெண்டரில் கலந்துகொள்வதற்கான கடைசி நாள் முடிவடைந்துவிட்டது. சுரங்கப்பாதை 4 வழியாக அமைக்க வேண்டுமா? அல்லது 6 வழி பாதையாக அமைக்க வேண்டுமா?, எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும், எங்கெங்கு தரை வழியுடன் இணைக்க வேண்டும், இதை நகரம் முழுவதும் விஸ்தரிக்க வேண்டுமா? என்ப குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

பெரிய அளவில் நிதி

இந்த பணிகளை ஒன்று இரண்டு நாளில் செய்து முடிக்க முடியாது. டெண்டரில் பங்கேற்றுள்ள நிறுவனத்தை நாங்கள் தேர்வு செய்த பிறகு, அந்த நிறுவனம் திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கும். இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. அதனால் இந்த பணிகளை பல்வேறு கட்டங்களாக செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் தற்போதைக்கு 190 கிேலா மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பல்லாரி ரோடு, பழைய மெட்ராஸ் ரோடு, எஸ்.டி.மால் சந்திப்பில் இருந்து மேக்ரி சர்க்கிள், மில்லர் ரோடு, சாளுக்கிய சர்க்கிள், டிரினிட்டி சர்க்கிள், சர்ஜாப்புரா ரோடு, ஓசூர் ரோடு வரையிலும், கனகபுரா ரோட்டில் இருந்து கிருஷ்ணராவ் பூங்கா, மைசூரு ரோடு சிர்சி சர்க்கிள், மாகடி ரோடு, துமகூடு ரோடு, யஷ்வந்தபுரம் சந்திப்பு, புறநகர் ரோட்டில் கோரகுன்டேபாளையா, கே.ஆர்.புரம், சில்க் போர்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வரி வருவாய்

நாட்டில் உத்தரபிரதேசம், மும்பையில் தற்போது சுரங்க பாதைகள் அமைக்கப்படுகின்றன. பெங்களூருவில் குறைந்தது 4 வழி சுரங்கப்பாதை வேண்டும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண 7-ந் தேதி (நாளை) ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

சுரங்க பாதை திட்டத்திற்கு மத்திய அரசின் உதவி கோரப்படும். பெங்களூரு மாநகராட்சியில் தற்போது சேகரிக்கப்படும் வரி போதாது. வெறும் ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே கிடைக்கிறது. அதனால் வரி வருவாயை அதிகரிப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story