எர்ணாகுளம் அருகே 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: தனியார் பள்ளி மூடல்
பிற மாணவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கையாக தனியார் பள்ளி மூடப்பட்டது.
பெரும்பாவூர்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் 19 மாணவ-மாணவிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் அவர்கள் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பிற மாணவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கையாக தனியார் பள்ளி மூடப்பட்டது. மேலும் பள்ளி வளாகம், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் சில மாணவர்களின் பெற்றோர்களும் நோரோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.