சி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்


Citizenship Certificates First Time 14 People
x

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்கள் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.

புதுடெல்லி:

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துன்புறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இதன்மூலம் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். ஆனால் இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள், 4 ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை சான்றிதழ்களின் முதல் தொகுப்பை இன்று வழங்கியது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்கள் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ளது. உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.


Next Story