ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் 14 காஷ்மீர் பண்டிட்டுகள்.. அவர்களின் முக்கிய வாக்குறுதி இதுதான்..!


ஹப்பா கடல் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அசோக் குமார் பட் மனு தாக்கல்  செய்தார்
x

தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹப்பா கடல் தொகுதியில் புலம்பெயர்ந்தோர் 25,000 பேர் உள்ளனர்.

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இதில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளிலும் மொத்தம் 310 வேட்பாளர்கள் 329 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். காஷ்மீர் பண்டிட் (காஷ்மீர் பண்டிதர்கள்) சமூகத்தைச் சேர்ந்த 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்பாக, ஸ்ரீநகரின் ஹப்பா கடல் தொகுதியில் மட்டும் 6 பண்டிட்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் அசோக் குமார் பட், லோக் ஜன சக்தி சார்பில் சஞ்சய் சராப், அனைத்து ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில சந்தோஷ் லப்ரூ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அசோக் ரெய்னா, பனாஜி டெம்பி, அசோக் சகாயிப் ஆகியோர் சுயேட்சையாக களமிறங்குகின்றனர். இதனால் அந்த தொகுதி புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான முக்கிய களமாக மாறியிருக்கிறது.

3 லட்சம் வரை உள்ள தங்கள் சமூக உறுப்பினர்களின் மீள்குடியேற்றத்தையும் மறுவாழ்வையும் உறுதி செய்வதே காஷ்மீர் பண்டிட் வேட்பாளர்களின் முக்கிய வாக்குறுதியாக உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹப்பா கடல் தொகுதியில் புலம்பெயர்ந்தோர் 25,000 பேர் உள்ளனர். அவர்களின் ஆதரவை பெறுவதற்காக 6 காஷ்மீர் பண்டிட் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதுபற்றி காஷ்மீர் பண்டிட் தன்னார்வலர் அமைப்பின் தலைவர் விக்ரம் கவுல் கூறியதாவது:-

காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் போட்டியிடுவதை வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள்கூட அவர்களை களமிறக்கியுள்ளன. அவர்களை சட்டமன்றத்தில் பார்க்க விரும்புகிறோம். காஷ்மீர் பண்டிட் சமூகம் எப்போதுமே அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் அவர்களுக்கு கட்சிகள் எதுவும் செய்யவில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக, காஷ்மீர் பண்டிட் சமூகம் தனது சொந்த நிலத்தில் அகதிகளாக வாழ்கிறது. வெளியே சென்றவர்களுக்கான திரும்புதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் பண்டிட்டுகளை கொண்டு வந்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை, எந்த அரசாங்கமும் அடிமட்ட அளவில் செயல்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story