மத்தியப் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு
குணா-ஆரோன் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
குணா-ஆரோன் சாலையில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குணா மாவட்ட கலெக்டர் தருண் ரதி உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதி செய்ததுடன், காயம் அடைந்தவர்கள் ஆபத்தில் இல்லை என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பதினேழு பேர் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பேருந்து மற்றும் லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தீயில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் கருகிய நிலையில், அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்றும், விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கலெக்டர் தருண் ரதி கூறினார்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவியும் அறிவித்துள்ளார்.