மேற்கு வங்காளத்தில் வெளுத்து வாங்கிய கனமழை...மின்னல் தாக்கி 11 பேர் பலி
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒரு தம்பதி உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனிடையே அங்கு கனமழைக்கு தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் தலைநகர் கொல்கத்தா உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு புதுமண தம்பதி உள்பட 6 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புயல் காற்றுடன் கொட்டிய கனமழையால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் ஒரு தம்பதி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதுபோன்று பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.