ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட 45 நாட்கள் எரியும் 108 அடி நீளமுள்ள அகர்பத்தி..!
இந்த அகர்பத்தியின் நறுமணம் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதோதரா,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 108 அடி நீளமுள்ள அகர்பத்தி தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக தயாரிக்கப்பட்ட இந்த அகர்பத்தியில் 3 ஆயிரம் கிலோ சாணம், 91 கிலோ நெய் உட்பட ஹோமத்திற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அகர்பத்தியின் நறுமணம் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு வீசும் என்றும் தொடர்ச்சியாக 45 நாட்கள் எரியக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டெய்னர் லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் அகர்பத்தியை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.