கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டு
கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
புதுடெல்லி,
தேர்தலின்போது, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் ஆதரிக்க விருப்பம் இல்லை என்றால், 'நோட்டா'வுக்கு போட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை நடந்த நாடாளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆய்வு செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளன.
சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975. இதன் சதவீதம் 1.06 ஆகும். சட்டசபை தேர்தல்களில், மராட்டிய மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிைடத்த 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுகள்தான், நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுகள் ஆகும்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 ஓட்டுகள்தான், அதிகபட்ச ஓட்டுகள். லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் ஆகும்.