மராட்டியத்தில் வசிக்கும் கன்னடர்களை பாதுகாப்பது அம்மாநில அரசின் கடமை-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
மராட்டியத்தில் வசிக்கும் கன்னடர்களை பாதுகாப்பது அம்மாநில அரசின் கடமை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: மராட்டியத்தில் வசிக்கும் கன்னடர்களை பாதுகாப்பது அம்மாநில அரசின் கடமை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மாதாந்திர ஓய்வூதியம்
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மராட்டிய மாநிலத்தில் செயல்பட்டு வரும் கன்னட பள்ளிகளின் மேம்பாட்டிற்காக எல்லை மேம்பாட்டு ஆணையம் நிதியை விடுவித்துள்ளது. மேலும் அகண்ட கர்நாடகம், சுதந்திர போராட்டம், கோவா விமோசன் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்படுத்த கூடாது
கர்நாடகம்-மராட்டியம் இடையே நல்லிணக்கம் உள்ளது. அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்த சூழ்நிலையில் மராட்டியத்தில் வசிக்கும் கன்னட மக்களை பாதுகாப்பது அந்த மாநில அரசின் கடமை ஆகும். மராட்டியத்தில் உள்ள ஜாத் தாலுகாவில் கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அந்த மக்களுக்கு குடிநீர் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த தாலுகாவில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும், ஜாத் தாலுகாவை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதை கர்நாடக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மராட்டிய முதல்-மந்திரி மாநிலங்கள் இடையே பிரச்சினையை ஏற்படுத்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.